வாடி விடும் பூக்களுக்கு மத்தியில், எப்போது பார்த்தாலும் அப்போதுதான் மலர்ந்தது போல் வாடாமல் இருக்கும் பூ இந்த ''வாடாமல்லி''. இது வறட்சியான நிலத்தில் கூட வளரக் கூடிய ஒரு செடியாகும். இந்த செடிகள் மிகவும் குறைவாக உயரம் வரை மட்டுமே வளரும். வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் அன்றாடம் கிடைக்க கூடிய பூ வகைகளில் ஒன்றாகும்.
கோம்பிரினா குளோபோசா (Gomphrena globosa)என்பது இதன் தாவர பெயர் ஆகும். குளோப் அமராந்த் (Globe amaranth) என்ற பெயரும் இதற்கு உள்ளது.
ஊதா, வெள்ளை, சிவப்பு என பல நிறங்களில் பூக்கும் இயல்பு கொண்டது. என்றாலும் ஊதா நிற பூக்களே அதிக அளவில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது. வாடாமல்லி பூ மாலை கட்டவும், அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. பல்வேறு அதி உன்னத மருத்துவ குணங்களும் கொண்டது.
வாடாமல்லி எப்படி பயிரிடுவது..? - (How to Cultivate)
வாடமல்லியை, ஆனி மாதம் (ஜூலை - July) பயிர் செய்ய ஏற்ற பருவம் ஆகும். தண்ணீர் தேங்காத செம்மண் வகைகள் சாகுபடிக்கு சிறந்தது. ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 10 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும். நிலத்தை நன்கு உழுது 3x10 செ.மீ அளவுள்ள பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்தியின் மேல் மக்கிய தொழுஉரம் இட வேண்டும். பின்பு விதைகளை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும். பூவாளி கொண்டு தண்ணீர் தெளிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
நிலம் தயாரித்தல் ( How to prepare land)
நிலத்தை 3 முதல் 4 உழவுகள் வரை உழுது மண்ணை பன்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் இட வேண்டும். 500 கிராம் அசோஸ்பைரில்லத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து நடுவதற்கு முன் நாற்றை நனைத்து எடுத்து நடவு செய்ய வேண்டும். நிலத்தின் தன்மையை பொருத்து, தேவைப்படும் அளவிற்கு ஏற்ப பார்கள் அமைத்து 30, 35 நாள் வயதுடைய நாற்றை 2 அடிக்கு 1 அடி என்ற விகிதத்தில் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். நாற்றை பார்களின் இருபுறமும் நடவு செய்யலாம்.
நீர் மேலாண்மை (Water Management)
நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின் மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 5 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாசனம் செய்தால் போதுமானது. நடவு செய்த 20வது நாள் மற்றும் 40 நாட்களில் களை எடுக்க வேண்டும். வயலில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். களை எடுத்தப்பின் 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 25 கிலோ கடலைப்புண்ணாக்கு கலந்து செடிகளின் அடிப்பகுதியில் வைத்து மண் அணைக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள் ( How to protect)
காஞ்சாரை நோய் தாக்கினால் செடியின் நுனி கருகி காணப்படும். அதேபோல் பூ கருகி காய்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் கலந்து பயிருக்கு தெளிக்க வேண்டும். நூற்புழு தாக்கினால் செடி மேலிருந்து கீழாக பட்டுக்கொண்டே வரும். இதனை கட்டுப்படுத்த நட்ட 40ம் நாள் அல்லது முதல் களையின் போது போரெட் அல்லது பியூரடான் குருணை மருந்துடன் டி.ஏ.பி அல்லது வேப்பம் புண்ணாக்கை சேர்த்து வயலில் தூவி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
அறுவடை ( Harvesting)
பூக்கள் பூத்துக்குலுங்க ஆரம்பித்தவுடன், பூக்களின் தேவையைப் பொருத்து சுழற்சி முறையில் அறுவடை செய்யலாம்.
மருத்துவ பயன்கள் - (Medical benefits)
வாடாமல்லி பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், ஆஸ்துமாவுக்கான மருந்தை தயாரிக்கப்படுகிறது.
வாடாமல்லியை அரைத்து அதன் விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து சருமத்தில் பூசினால், சருமமானது மிருதுவாகும்.
தோலின் கரிய நிறம் மாற்றம் அடையும். நுண் கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை இந்த மலருக்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக வாடாமல்லி விளங்குவதால், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.
பீட்டா சயனீஸ், ஆல்பா சயனீஸ் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருட்கள் வாடாமல்லியில் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு வேதிப் பொருட்கள் காரணமாக வாடாமல்லி ஆன்டி பயாட்டிக்காக செயல்படுகிறது. இதனால் இருமலை தடுக்கக் கூடியதாகவும், காய்ச்சலை தணிக்கக் கூடியதாக வாடாமல்லி வேலை செய்கிறது.
குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெற்றிலையில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒன்றின் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் சில நாட்களில் வலி மற்றும் வீக்கம் சரியாகும்.
வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இதன் இலை மற்றும் பூக்களைப் பயன்படுத்தி சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கலாம்.
No comments:
Post a Comment